×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் செயற்கை முறையில் பவள பாறைகள்

தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆஸ்திரேலிய தூதரகத்தின் நிதி உதவியுடன் பிளான்ட் டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக சென்னை பைபர் படகு மீன்பிடி தொழிலாளர்கள் நலச்சங்க கோரிக்கையின் பேரில் கடலுக்குள் செயற்கை பவளப் பாறைகளை நிறுவ திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.10 லட்சத்தில் 100 எண்ணிக்கைகள் கொண்ட செயற்கை பவளப் பாறைகளை கடலில் நிறுவும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சாரா கிர்லவ் பேசும்போது, ‘‘என்னுடைய வீட்டில் மீன்களை சமைக்கும்போது சென்னை காசிமேடுதான் நினைவுக்கு வரும்’’ என்று பெருமையுடன் கூறினார்.

மீன்வளத்துறை அதிகாரி மங்கத் ராம் சர்மா கூறுகையில், ‘‘இந்த துறையில் உள்ள நிலவரங்கள் குறித்து எனக்கு பெரிதாக அனுபவம் இல்லை. ஏனென்றால் நான் இத்துறைக்கு வந்து 2 வாரங்கள்தான் ஆகிறது’’ என்றார். தொடர்ந்து, இருவரும் சேர்ந்து கொடியசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். செயற்கையான முறையில் செய்யப்பட்ட இந்த பவள பாறைகளை பைபர் படகுகள் மூலம், மீன் பிடிக்கும் எல்லையான ஜிபிஎஸ் கிழக்கில் 22, மேற்கில் 8 என்ற மையப் பகுதியில் கடலுக்குள் இறக்கினர். இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள், தனியார் தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

The post காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் செயற்கை முறையில் பவள பாறைகள் appeared first on Dinakaran.

Tags : Kasimedu Fishing Harbour ,Thandaiyarpet ,Plant Trust ,Australian Embassy ,Kasimedu Fishing Port ,Chennai ,
× RELATED துணிக்கடையில் தீ விபத்து